இயற்கை வளத்தைப் பாதுகாப்பது அவசியம்: ஆட்சியர்
நமது முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற இயற்கைவளத்தை பாதுகாப்பதில் மாணவ, மாணவியர் கவனம் செலுத்தவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறினார்.
நமது முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற இயற்கைவளத்தை பாதுகாப்பதில் மாணவ, மாணவியர் கவனம் செலுத்தவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை புதுமுக வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில்,பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், புதுமுக வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்து பேசியது: கல்வியுடன் சமுதாய நலனிலும் மாணவர்கள் அக்கறை செலுத்துவது அவசியம். நமக்கு நமது முன்னோர் விட்டுச்சென்ற இயற்கை வளத்தை வருங்காலச் சந்ததியினருக்கு நாமும் விட்டுச்செல்லவேண்டியது அவசியம்.
இயற்கை வளத்தை காப்பதில் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும். மழை நீர் சேமிப்பு, மரக்கன்று நடுதல், பாலித்தீன் தவிர்ப்பு ஆகியவற்றில் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது அவசியம். கல்வி நிலையங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்வதில் மாணவர்களின் பங்கு முக்கியமாகும். அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது இயற்கை வளங்களே என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.சின்னையா, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஐசக்மோகன்லால், பல்கலைக்கழக இயக்குநர் கே.சந்திரசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.