காவிரி: வருமான வரி அலுவலகம் முற்றுகை-போலீஸ் தடியடி: நாம் தமிழர் கட்சியினர் 85 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 85 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை நரிமேடு உழவர் சந்தை பகுதியில் இருந்து அக்கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று வருமான வரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஒரு பகுதியினர் வருமான வரித்துறை அலுவலக வாயிற் கதவு மீது ஏறி அலுவலகத்துக்குள் குதித்து கதவைத் திறந்தனர்.
இதையடுத்து கட்சியினர் பலரும் அலுவலக வளாகத்துக்குள் புகுந்து முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர். கட்சியினர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதை அறிந்ததும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சியினர் அனைவரும் போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸ் தடியடியைக் கண்டித்து கட்சியினர் வருமானவரி அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி கொண்டுசென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டம் தொடர்பாக வெற்றிக்குமரன் கூறியது: மத்திய அரசுக்கு இதர மாநிலங்களை விட தமிழகத்தில் இருந்துதான் வருமான வரி அதிகம் செல்கிறது. மத்திய அரசுக்கு வருமானத்தை அளிக்கும் தமிழகத்தை வஞ்சிப்பதால் வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.