விமானப் பயணியின் செல்லிடப்பேசிக்குள் கடத்தல் தங்கம்: 200 கிராம் பறிமுதல்
செல்லிடப்பேசிக்குள் மறைத்துக் கடத்திவரப்பட்ட 200 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
செல்லிடப்பேசிக்குள் மறைத்துக் கடத்திவரப்பட்ட 200 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் இருந்து புதன்கிழமை மாலை மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக வந்த தகவலை அடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அப்போது மதுரையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் சுல்தான் அலாவுதீனை சந்தேகித்த சுங்கத்துறையினர் அவரது உடைமைகளைச் சோதனையிட்டனர்.
சோதனையில் அவர் வைத்திருந்த ஆப்பிள் செல்லிடப்பேசி வழக்கத்தை விட அதிக எடையுடன், செயல்படாமலும் இருந்ததாம்.
அதனைச் சோதனையிட்டபோது அதில் தலா 100 கிராம் எடையுள்ள இரண்டு தங்ககட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கத்தின் மதிப்பு ரூ. 6 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும். இதுகுறித்து சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.
செல்லிடப்பேசி கடத்தல்: இதே விமானத்தில் கொழும்பில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகபுப் அலி மகன் நைனார் சவுக்கத்அலி என்பவரது உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது பெட்டியில் சிகரெட் பண்டல் ஒன்று இருந்துள்ளது. அதனை சோதனையிட்டதில் 10 ஆப்பிள் எஸ்.10 மாடல் செல்லிடப்பேசிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப் பேசிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.