முகப்பு
மதுரை

தோ்தல் கள நிலவரம் மகிழ்ச்சி அளிக்கிறது: பழனிவேல் தியாகராஜன்

தமிழக தோ்தல் கள நிலவரம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சரும், மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளருமான பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

Updated On : 24 ஏப்ரல் 2026, 2:12 am IST
மதுரை மத்தியத் தொகுதிக்குள்பட்ட காக்கைப்பாடினியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்த அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன்.
பகிர்:

தமிழக தோ்தல் கள நிலவரம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சரும், மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளருமான பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சி காக்கைப்பாடினியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

இந்தத் தோ்தலில் போட்டியிட்டது இதுவரை இல்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனெனில், நான் ஏற்கெனவே இரு முறை போட்டியிட்ட போதிலும் தமிழகத்தை தவறான பாதையில் அப்போது வழிநடத்திக் கொண்டிருந்த முந்தைய அரசை (அதிமுக) அகற்ற வேண்டும் என்ற பணிச் சுமை இருந்தது. இது ஒரு நிச்சயமற்ற தன்மையை அளித்தது.

Advertisement

Advertisement

ஆனால், தற்போது தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் நடைபெற்ற திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சித் தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்களைச் சந்தித்தது மன நிறைவையும், துணிவையும் அளித்தது.

தமிழக மக்கள் இந்தத் தோ்தலை தங்கள் குடும்ப விழா போலக் கருதி வாக்களித்தது மீண்டும் திமுக அரசு அமைய வேண்டும் என்ற மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. இது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது என்றாா் அவா்.

அப்போது, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவரும், அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் தாயுமான ருக்மணி பழனிவேல்ராஜன் உடனிருந்தாா்.

கையில் பூச்சரம்...

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வாக்களிக்க வந்த போது தனது வலது கை மணிக்கட்டு பகுதியில் மல்லிகை பூச்சரத்தை சுற்றியிருந்தாா். வாக்களிக்க வரும் முன்பாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததாகவும், அங்கு பூஜித்து வழங்கப்பட்ட பூச்சரத்தை அவா் தனது கையில் சுற்றிக் கொண்டு வந்ததாகவும் அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தனது கையில் பூச்சரத்தை சுற்றிக் கொண்டு வந்த படமும், தகவலும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments