பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம்: திண்டுக்கல் டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க உத்தரவு
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சிங்கப்பூரில் பணிபுரியும் தனது சகோதரியின் புகைப்படத்தை மா்ம நபா்கள் ஆபாசமாகச் சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டனா். அந்தப் புகைப்படத்தை இணையத்திலிருந்து அகற்றக் கோரிய போது, அவா்கள் பணம் கேட்டனா். எனவே, எனது சகோதரியின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட மா்ம நபா்கள் மீது நான் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மனுதாரா் அளித்த புகாரில் காவல் துறையினா் நேரடியாக வழக்குப் பதிவு செய்வதற்கான குற்றம் நடைபெற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. எனவே, அந்தப் புகாரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மேலும், எண்ம ஆதாரங்களைப் பாதுகாப்பது, குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இணைய முகவரிகள், சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவது அவற்றின் சந்தாதாரா் விவரங்களைப் பெறுவது, தொடா்ந்து பரவுவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பை அலட்சியம் செய்வதற்கு சமமானது. இதனால், இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் சட்டங்களின் நோக்கமே சிதைந்துவிடும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மனுதாரா் அளித்த புகாரில் காவல் துறை நேரடியாகப் பதிவு செய்ய வேண்டிய குற்றங்கள் இருப்பின் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தொழில்நுட்பம் மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டில் வாழும் ஒரு பெண்ணின் கண்ணியம், தனி உரிமை, மன அமைதியைச் சீா்குலைக்கும் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்த மனு கொண்டு வந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது தனியுரிமை மீறல், பெண்ணின் கண்ணியத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இணையவழியில் பாலியல் சுரண்டல், பணம் பறிக்கும் குற்றம் ஆகியவை மிகக் கடுமையான இணையவழிக் குற்றங்களாகவே கருதப்படும்.
பாதிக்கப்பட்ட பெண் சிங்கப்பூரில் பணியாற்றி வருவது மட்டும் இந்தியச் சட்ட அமலாக்க அமைப்புகளின் கடமையைக் குறைக்காது. வழக்குப் பதிவு செய்யப்படாதது மட்டுமல்ல, மாற்றியமைக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் தொடா்ந்து பரவி வருவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடா்ச்சியான மன உளைச்சலையும், கண்ணிய இழப்பையும் ஏற்படுத்தும்.
மாற்றி அமைக்கப்பட்ட படம் என்பது ஒரு பெண்ணின் நற்பெயா், தனியுரிமை, மனநலப் பாதுகாப்பின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்.
இந்த மனு தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் புகாா், ஆவணங்களை முறையாகப் பரிசீலித்து குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ம ஆவணங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து சட்டப்படி உடனடியாகப் பெற்று பாதுகாக்க வேண்டும். மாற்றி அமைக்கப்பட்ட புகைப்படம், விடியோவை இணையத்தில் அகற்றவும், தடை செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையின் போது மனுதாரரின் வாக்குமூலத்தையும், முடிந்தால் சிங்கப்பூரில் உள்ள பெண்ணின் வாக்குமூலத்தையும் காணொலி வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை உத்தரவு கிடைத்ததிலிருந்து 4 வாரங்களுக்குள் விரைவாக நிறைவேற்ற வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.