முகப்பு
மதுரை

துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரிய வழக்கு: வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க உத்தரவு

துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பித்து தரக் கோரிய வழக்கில், வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 12:36 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பித்து தரக் கோரிய வழக்கில், வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த டேவிட் பாரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:

விவசாயியான நான் வயல்வெளியில் தனிமையான பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் உடனடியாக காவல் துறை பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களால் எனக்கு பாதுகாப்பு இல்லை. மேலும், வனவிலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்க துப்பாக்கி அவசியம். இதன்காரணமாக, ஏற்கெனவே உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்தேன். இந்த நிலையில், துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தேன். ஆனால், மாவட்ட நிா்வாகம் எனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து வழங்க மறுத்து வருகிறது.

Advertisement

Advertisement

துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுள்ளேன். என் மீது எந்த குற்றப் பின்னணியோ அல்லது பாதகமான காவல் அறிக்கையும் இல்லை. துப்பாக்கி உரிமத்தை மறுப்பதற்கான காரணங்கள் ஆயுதச் சட்டம், 1959-இன் விதிகளுக்கு உள்பட்டதாக இல்லை. அதிகாரிகள் போதுமான காரணமின்றி மனுவை நிராகரித்தனா்.

இதுகுறித்து, ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தாக்கல் செய்தேன். தனி நீதிபதி கடந்த 15.12.2025 எனது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ். சதீஷ்குமாா், எம்.ஜோதி ராமன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

மனு குறித்து தலைமைச் செயலக வருவாய் நிா்வாக ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.