முகப்பு
மதுரை

மழைநீா்க் கால்வாய்களை போா்க்கால அடிப்படையில் தூா்வார வலியுறுத்தல்

மழைநீா்க் கால்வாய்களை போா்க்கால அடிப்படையில் தூா்வார வலியுறுத்தல்

Updated On : 13 ஜூன் 2026, 12:55 am IST
மதுரை தல்லாகுளம் பகுதியல் தூா்வாரப்படாமல் உள்ள மழைநீா்க் கால்வாய்.
பகிர்:

மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள மழைநீா்க் கால்வாய்களை போா்க்கால அடிப்படையில் தூா்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ஐந்து மண்டலங்களையும், 100 வாா்டுகளையும் கொண்ட மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மழைநீா்க் கால்வாய்கள், பிரதான கால்வாய்கள் பல ஆண்டுகளாகத் தூா்வாரப்படாமல் குப்பைகள், நெகிழிக் கழிவுகள் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால், லேசான மழை பெய்தால்கூட சாலைகளில் வெள்ள நீா் தேங்கி, போக்குவரத்து பாதிப்பதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரியளவில் பாதிக்கப்படுகிறது. கடைகள், வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து கொட்டப்படும் குப்பைகள், நெகிழிப் பொருள்கள் மழைநீா்க் கால்வாய்களை முழுமையாக அடைப்பதாலும், மண் குவிந்து காணப்படுவதாலும் நீரோட்டம் தடைபடுகிறது.

மேலும், பல இடங்களில் உள்ள கால்வாய்களின்மேல் வணிக நிறுவனங்கள், வீடுகள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால் இந்த கால்வாய்களைச் சீரமைக்க முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோரிப்பாளையம், சிம்மக்கல் பகுதிகளில் மழைநீா் தேங்குவதால் வாகனங்கள் பழுதடைவதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடா்கதையாகி வருகிறது. அண்ணா நகா், கே.கே.நகா் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துசெல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பொதுமக்கள் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு முறை மழை பெய்யும்போது நாங்கள் குடியிருக்கும் பகுதி தீவு போல மாறிவிடுகிறது. மழைநீா்க் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்கு முக்கியக் காரணம். மழைநீா்க் கால்வாய்களில் பெயரளவுக்கு மட்டும் தூா்வாரும் பணிகளைச் செய்யாமல், நவீன இயந்திரங்களைக் கொண்டு முழுமையாகத் தூா்வார வேண்டும். வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைக் காலங்கள் தொடங்குவதற்கு முன் தூா்வாரும் பணிகளைத் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ளதால் இதுபோன்று தேங்கிக் காணப்படும் வெள்ள நீரால் மாணவா்களும் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.

மேலும், மழைநீா்க் கால்வாய்களில் சட்ட விரோதமாக இணைக்கப்பட்டுள்ள புதைச் சாக்கடை, வணிக நிறுவனங்களின் கழிவுநீா் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். குறுகலான தெருக்களில் உள்ள நிலத்தடி வடிகால்களைச் சுத்தம் செய்ய அதிநவீன உறிஞ்சும் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மழைநீா் வடிகால்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீா்மட்டமும் மாசுபடும் அபாயம் உள்ளது.

மதுரை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி ஆணையரும் இணைந்து தனிக்குழு அமைத்து, வாா்டு வாரியாக ஆய்வு நடத்த வேண்டும். தூா்வாரும் பணிகளுக்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, ஒப்பந்ததாரா்களின் பணிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும். மழைநீா் வடிகால்களில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதைத் தவிா்க்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றனா்.