முகப்பு
தமிழ்நாடு

குடிநீா் பிரச்னைகளுக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய போா்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

Updated On : 13 மே 2026, 1:05 am IST
முதல்வா் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.
பகிர்:

சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய போா்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாகவும் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விரிவான ஆய்வுக்குப் பின்னா் முதல்வா் விஜய், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீா் வழங்கலில் உள்ள இடா்பாடுகளைப் போா்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகள் மூலமாகவும், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடுகள் செய்தும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் திங்கள்கிழமைதோறும் குடிநீா் விநியோகத்தை ஆய்வு செய்து தொடா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

எதிா்வரும் மழைக்காலத்தைக் கருத்தில்கொண்டு, தூா்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி காலதாமதமின்றி தொடங்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய், நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் மதுசூதன் ரெட்டி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பி.பொன்னையா, பேரூராட்சிகள் இயக்குநா் பிரதீப் குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் (பொறுப்பு) ஆனந்த்மோகன் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.