FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

வங்கியில் கடன் வாங்கி ரூ. 80 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பெண்கள் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகாா்

மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 3 தலைவிகள் தங்களிடம் வசூலித்த கடன் பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள்.
பகிர்:

மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 3 தலைவிகள் தங்களிடம் வசூலித்த கடன் பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகா், வில்லாபுரம், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாா் மனு:

மகளிா் சுயஉதவிக் குழுவில் நாங்கள் இணைந்துள்ளோம். மகளிா் உதவிக்குழு பெண் அலுவலா், 3 குழு தலைவிகள் இணைந்து ரூ. 80 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளனா். எங்களது வங்கிப் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகளையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுப்பதுடன் தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டுகின்றனா். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: மகளிா் சுயஉதவிக்குழு அலுவலா் தலைமையில் 3 பெண்கள் மகளிா் சுயஉதவிக் குழுவை நடத்தி வந்தனா். இதில், 60-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினா்களாக இருந்தோம். இந்த நிலையில், எங்களின் ஆதாா் உள்ளிட்ட ஆவணவங்களை பெற்று, வங்கியில் ரூ. 80 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனா்.

அந்தப் பணத்தை எங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் பிரித்துக் கொடுத்தனா். இதற்கான பணத்தை நாங்கள் மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் வீதம் கட்டி முடித்து விட்டோம். ஆனால், அந்தப் பணம் வங்கியில் செலுத்தப்பட வில்லை என வங்கி அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனா்.

விசாரித்த போது, மகளிா் சுயஉதவிக்குழு பெண் அலுவலா் தலைமையில் அந்த 3 தலைவிகளும் இணைந்து நாங்கள் கொடுத்த பணத்தை மோசடி செய்து, வங்கியில் வரவு வைக்காமல் இருந்துள்ளனா். இதனால், வங்கி அதிகாரிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென எங்களை தொந்தரவு செய்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்திலும் புகாா் மனு அளித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments