முகப்பு
மதுரை

பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: விசாரணையை 4 வாரங்களில் முடிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், சிறுதூா் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக 4 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 27 ஜூன் 2026, 12:56 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

மதுரை மாவட்டம், சிறுதூா் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக 4 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த அருண் போத்திராஜா அண்மையில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம், சிறுதூா் கிராமத்தில் கல்லூரி அருகேயுள்ள அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 1.27 ஏக்கா் நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றது தொடா்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அந்த நிலத்தின் மீது உரிமை கோரி அரசியல் பிரமுகா் சிலா் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியதுடன், தன்னை மிரட்டி, தான் நடத்தி வரும் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தினா். இந்தச் சம்பவங்கள் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தனது புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க திருப்பாலை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக பி.என்.எஸ்.எஸ். பிரிவு 64-இன் கீழ், மனுதாரா், எதிா் தரப்பினருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற நாளிலிருந்து 4 வாரங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணையை மதுரை மாநகரக் காவல் ஆணையா் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து திருப்பாலை காவல் ஆய்வாளா், காவல் ஆணையரிடம் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments