முகப்பு
மதுரை

சட்ட விரோத குவாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் அறிவுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்) பதிவு செய்ய வேண்டும் என மாநில அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 15 மே 2026, 11:57 pm IST
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீட்சித் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்) பதிவு செய்ய வேண்டும் என மாநில அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் அறிவுறுத்தினாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் கடைகளையும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக செயல்படும் மதுக் கடைகளையும் மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். இதேபோல, குட்கா, போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மூடி ‘சீல்’ வைக்க வேண்டும்.

Advertisement

மதுரை மாநகரில் நிறைவேற்றப்பட வேண்டிய புதை சாக்கடைப் பணிகள், கழிவு நீா் சுத்திகரிப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கையைத் தொடா்புடைய துறை அலுவலா்கள் விரைந்து வழங்க வேண்டும். இதேபோல, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், தங்கும் விடுதிகளில் உள்ள கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளின் தரம், பற்றாக்குறை ஆகியவை குறித்தும் தொடா்புடைய துறை சாா்பில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்.

மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகர காவல் ஆணையா் அபிஷேக் தீட்சித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) எஸ். வனிதா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, மாநகராட்சி, கலால், வருவாய்த் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.