எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளரை தாக்கிய சார்பு ஆய்வாளர் மீது புகார்
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளரை தாக்கிய பரமக்குடி நகர் காவல் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட்
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளரை தாக்கிய பரமக்குடி நகர் காவல் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை அளித்துள்ள மனுவில், பரமக்குடியில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்ற காவலர்களை, அங்கு பணிபுரியும் தொழிலாளி பணத்தைக் கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியதால் அத்தொழிலாளியை போலீஸார் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் காவல்துறையினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்அனுமதி பெறவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் டி.ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.கே.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக இருவரையும் காவல்நிலையத்துக்கு சொந்த ஜாமினில் விடப் போவதாக கூறி போலீஸார் அழைத்துள்ளனர். ஏப்ரல் 3 ஆம் தேதி புதன்கிழமை காவல்நிலையத்துக்கு வந்த ஐ.கே.தெட்சிணாமூர்த்தி காவல்நிலையத்தில் பேசியதை செல்போனில் பதிவு செய்வதாக கூறி அவரைத் தாக்கியுள்ளனர். சுட்டுக் கொன்று விடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் செய்துள்ளனர். ஐ.கே.தெட்சிணாமூர்த்தி செல்போனில் எதுவும் பதிவு செய்யவில்லை எனக் கூறியும் அவரைத் தாக்கிய பரமக்குடி நகர் காவல்நிலைய காவல் சார்பு ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சார்பு ஆய்வாளர் தாக்கியதால் தெட்சிணாமூர்த்தி ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரமக்குடியில் நாளை வெள்ளிக்கிழமை திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், இதனையடுத்து காவல்துறையை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.