முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை மறியல்: 2,222 பேர் கைது

"ஜாக்டோ- ஜியோ' அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை

Updated On : 24 ஜனவரி 2019, 12:40 am IST
பகிர்:

"ஜாக்டோ- ஜியோ' அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 2,222 பேர் கைது செய்யப்பட்டனர்.
   பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் "ஜாக்டோ- ஜியோ' அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை ராமநாதபுரம் நகரில் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாவட்டச் செயலர்கள் ரா.சிவபாலன், அ.தமிழ்ச்செல்வம், ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்டத் தலைவர் சோ.முருகேசன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மாவட்டத் தலைவர் ஏ.குமார் உள்ளிட்டோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். 
 அப்போது சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் 210 பெண்களும், 120 ஆண்களும் என மொத்தம் 330 பேர் கைதாகினர்.
     மேலும், ராமேசுவரத்தில் 57 ஆண்கள், 163 பெண்கள் என 220 பேரும், ஆர்.எஸ்.மங்களத்தில் 60 ஆண்கள், 100 பெண்கள் என 160 பேரும் கைதாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 
 மேலும், கீழக்கரையில் 56 ஆண்கள், 112 பெண்கள் என 168 பேரும் கைதாகியுள்ளனர். இப்போராட்டத்தில் கமுதியை தவிர அனைத்து இடங்களிலும் பெண்களே அதிகளவில் பங்கேற்றனர். மாவட்ட அளவில் நடந்த சாலை மறியலில்1,378 பெண்களும், 835 ஆண்களும் கைதாகியுள்ளனர். 
   பாதிப்பு எவ்வளவு- ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரண்டாவது நாளாக ஏற்கெனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கங்களுடன் புதியதாக பல சங்கங்களும் இணைந்தன. இதனால், மாவட்டத்தில் 17 ஆயிரம் அரசுப் பணியாளர்களில் 5,911 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் 381 பேர் விடுமுறையில் சென்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கல்வித்துறை சார்பில் மட்டும் 4,525 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
தேர்வைப் புறக்கணிப்போம்: ராமநாதபுரம் நகரில் சாலை மறியல் போராட்டத்தின் போது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் சோ.முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நடத்துவோம். தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனில் பத்தாம் வகுப்பு உள்ளிட்ட அரசுப் பொதுத் தேர்வுகளையும் புறக்கணிப்போம் என்றார்.
திருவாடானை: திருவாடானை தாலுகா,ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆசிரியர்கள் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை  நடைபெற்றது. இதற்கு தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வருவாய் துறை சங்க மாவட்ட தலைவர் வட்டாட்சியர் சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டப் பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தார் . இதனால் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  பின்னர் அனைவரையும் காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் அறிவழகன்  திருவாடானை காவல் துறை ஆய்வாளர் புவனேஷ்வரி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட 240 பெண்கள் 60 ஆண்கள் என 300 பேரையும், அதே போல் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற சாலை மறியலில் பெண்கள் 100 உள்பட160 பேரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கடலாடி: கடலாடி வட்டார "ஜாக்டோ- ஜியோ' சார்பில் கடலாடி அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.முருகேஸ்வரி தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் துணை வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல்முருகன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் வி.முனியசாமி, வட்டாரச் செயலர் ஒய்.ஆனந்தராஜ், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் எஸ்.ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலமுருகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளியின் ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட இணைச் செயலர் எம்.குருசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.தாமஸ், இம்மானுவேல் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 124 ஆண்களும், 142 பெண்களும் கைது செய்யப்பட்டு கடலாடி தனியார் திருமண  மண்டபத்தில் போலீஸார் அடைத்தனர்.
முதுகுளத்தூர்:  முதுகுளத்தூர்-சாயல்குடி செல்லும் சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற சாலை மறியலுக்கு ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் முத்துமுருகன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் அருள்தாஸ் வரவேற்றார். தலைமையாசிரியர்கள் முகம்மது ஜியாவூதீன், நவீன்மாரி, பிரிட்டோ, ஜோசப் விக்டோரியா ராணி,மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
கமுதி: கமுதியில் "ஜாக்டோ- ஜியோ' அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.குமார் தலைமையிலும், ஜாக்டோ- ஜியோ கமுதி ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி முன்னிலையிலும் கமுதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை  மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கமுதி ஒன்றியத்தை சேர்ந்த 198 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
பரமக்குடி: இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் கா.சாமிஅய்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் த.தர்மராஜ், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பவுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இந்த ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பின்னர் அனைவரும் பரமக்குடி- இளையான்குடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 250 பெண்கள் உள்பட 500 பேரை கைது செய்து தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.