முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

கச்சத்தீவு- மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ஒரு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 15 ஏப்ரல் 2026, 3:46 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

கச்சத்தீவு- மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ஒரு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 365 விசைப் படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மீனவ சங்கத் தலைவா் ஜேசுராஜா என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் சேகா் (66), சக்திவேல் (54), அருணகிரி (54), பால்ராஜ் (55) ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுடன், கைது செய்யப்பட்ட மீனவா்கள் 4 பேரையும் மன்னாா் துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று, நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

பின்னா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, கிளிநொச்சி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களை வருகிற 17-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.