கௌரவ ஊக்கத்தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் 33,379 விவசாயிகள் சேர்ப்பு
தேனி மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், கௌரவ ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள்
தேனி மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், கௌரவ ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் இதுவரை மொத்தம் 33,379 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை சிறு மற்றும் குறு விவசாயிகள் 100 பேருக்கு ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கி அவர் பேசியது:
மத்திய அரசு அறிவித்துள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் கௌர ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத் திட்ட நிதியை பயனாளிகளுக்கு
3 தவணைகளாக வழங்கவும், 2018, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 2019, மார்ச் 31-ஆம் தேதி வரையுள்ள காலத்திற்கு முதல் தவணையாக ரூ.2,000-ஐ இம் மாத இறுதிக்குள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் கௌரவ ஊக்கத் தொகை பெறும் சிறு, குறு விவசாயிகள் பட்டியலில் இதுவரை தேனி வட்டாரத்தில் 3,099 பேர், ஆண்டிபட்டி வட்டாரத்தில் 11,336 பேர், பெரியகுளம் வட்டாரத்தில் 6,101 பேர், போடி வட்டாரத்தில் 4,430 பேர், உத்தமபாளையம் வட்டாரத்தில் 8,413 பேர் உள்பட மொத்தம் 33,379 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 500 விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கௌர ஊக்கத் தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்: கௌர ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெறாத, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு அனைத்து கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு ஆகிய இடங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தகுதியுள்ள விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை சமர்ப்பித்து கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரா.பார்த்திபன், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரி பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.