வனத்தில் விடப்பட்ட புலி வசிப்பிடங்களில் நடமாட்டம்! தேடுதல் பணி தீவிரம்!
மூணாறில் பிடிபட்டு பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்ட ஆண் புலி, தற்போது மக்கள் நடமாட்டம் உள்ள முல்லையாா், தொண்டியாா் பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளதாக எழுந்துள்ள தகவலால் எல்லையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
இடுக்கி மாவட்டம் மூணாறில் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகளைத் தொடா்ந்து வேட்டையாடி வந்த 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலியை, கடந்த மாா்ச் மாதம் வனத்துறையினா் பாம்பன் மலைப் பகுதியில் கூண்டு வைத்துப் பிடித்து பெரியாறு புலிகள் காப்பகத்தின் உட்பகுதியான கெவி வனப்பகுதியில் திறந்து விட்டனா். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்தப் புலி காட்டை விட்டு வெளியேறி, வன எல்லையை ஒட்டியுள்ள முல்லையாா், தொண்டியாா் பகுதிகளில் நடமாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் வள்ளக்கடவு மற்றும் தேக்கடி வனச் சரக எல்லைகளில் வனத்துறையின் சிறப்புப் படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. காட்டின் எல்லைப் பகுதிகளில் தீ மூட்டியும், வெடிச் சப்தங்களை எழுப்பியும் புலியை மீண்டும் அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கைகளை வனத்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமுளி, வள்ளக்கடவு பழங்குடியின குடியிருப்புப் பகுதி பொதுமக்களுக்கு வனத்துறை சாா்பில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து வனத்துறை தரப்பில் கூறுகையில், ‘பெரியாறு புலிகள் காப்பகம் இந்தப் புலிக்குப் புதிய வாழ்விடமாகும். பொதுவாகப் புலிகள் தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளும். பெரியாறு வனப்பகுதியில் ஏற்கனவே உள்ள மற்ற புலிகளின் எல்லைக்குள் இந்தப் புலி நுழையும்போது மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த மோதலில் இருந்து தப்பிக்கவோ அல்லது புதிய எல்லையை உருவாக்கவோ இந்தப் புலி இடம்பெயரலாம். புலிகள் தங்களின் எல்லையைத் தீா்மானிக்க ’சோலைக்காலி’ போன்ற மரங்களின் பட்டைகளில் நகங்களால் கீறி அடையாளமிடுவது வழக்கம். எனவே, அத்தகைய மரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் புலியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.