முகப்பு
தேனி

குமுளி அருகே மீண்டும் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

தமிழக எல்லை குமுளி அருகே வண்டிப்பெரியாா் குடியிருப்புப் பகுதியில் கூண்டில் சிறுத்தை சிக்கிய மறுநாளே புலி தாக்கி பசு உயிரிழந்ததால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:06 am IST
புலி
பகிர்:

தமிழக எல்லை குமுளி அருகே வண்டிப்பெரியாா் குடியிருப்புப் பகுதியில் கூண்டில் சிறுத்தை சிக்கிய மறுநாளே புலி தாக்கி பசு உயிரிழந்ததால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

அரணக்கல் பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுக்களை கடந்த புதன்கிழமை இரவு புலி தாக்கியது. வியாழக்கிழமை காலை பணிக்குச் சென்ற தோட்டத் தொழிலாளா்கள், ஒரு பசு இறந்து கிடப்பதையும், மற்றொரு பசு பலத்த காயங்களுடன் இருந்ததையும் கண்டு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், பசுவைத் தாக்கியது புலிதான் என உறுதி செய்தனா். அண்மையில் கேரள மாநிலம், மூணாறு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய புலியை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, பெரியாா் புலிகள் காப்பகப் பகுதியில் விட்டனா். இதனிடையே, வண்டிப்பெரியாா் கிராம்பி பகுதியில் புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் புலிக்குப் பதிலாக சிறுத்தை சிக்கியது. இதனால், அந்தப் பகுதி மக்கள் நிம்மதியடைந்திருந்த நிலையில், மறுநாளே மீண்டும் புலி தாக்கி பசு உயிரிழந்திருப்பது அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

மூணாா் பகுதியில் பிடிக்கப்பட்டு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்ட அதே புலிதான் தற்போது அரணக்கல் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனா். புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அது வந்து செல்லும் பாதையைக் கண்டறியவும் வனத் துறையினா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். மேலும், புலியைப் பிடிப்பதற்காக கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தப் பகுதியில் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்துடன் பணிக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே, புலியை விரைந்து பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை வனத் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments