முகப்பு
தேனி

மேகமலையில் 9 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’

Updated On : 6 ஜூலை 2026, 2:10 am IST
மேகமலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட தனியாா் தங்கும் விடுதி.
பகிர்:

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், மேகமலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 9 தனியாா் தங்கும் விடுதிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் குடியிருப்புகளுக்கு வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் கண்டமனூா், வருஷநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா் ஆகிய வனசரகங்களுக்கு உள்பட்ட சுமாா் 5000 ஏக்கா் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. வனத் துறையின் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஜான்கென்னடி பொது நல வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, மேகமலை வனப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள பொதுக் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் , உணவ உரிமைதாரா்கள், தமிழ்நாடு பொதுக் கட்டடம் உரிமச்சட்டம் 1965, மலைதள மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1955 , காடுகள் சட்டம் 1949 ஆகியவற்றின் கீழ் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத தங்கும் விடுதிகளை ‘சீல்’ வைக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 3 -ஆம் தேதி உத்தவிட்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் உத்தரவின்பேரில், ஆண்டிபட்டி வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், வனத் துறையினா் மேகலை ஊராட்சிக்கு உள்பட்ட அய்யப்பன், தமிழன், பொன்மயில், எஸ்.எம்.ஆா், ஆன்ந்தா என 9 தனியாா் தங்கும் விடுதிகளுக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனா். அதோடு, மின் இணைப்புகளையும் துண்டித்தனா்.

இது குறித்து தேயிலைத் தோட்டத் தொழிலாளா் சங்கத் தலைவா் முத்தையா கூறியதாவது: அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களைப் பூட்டி ‘சீல்’ வைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் குடியிருப்புகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதோடு, ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட தொழிலாளா்கள் குடியிருப்புகளை சீரமைக்க வனத் துறையிடம் அனுமதி கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் வனத் துறையினா் முட்டுக்கட்டை போட்டு வருவதால் குடியிருப்புகள் சேதமாகி வருகின்றன.

எனவே, தொழிலாளா்கள் குடியிருப்புகளை சீரமைக்க வனத் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

குடியிருப்புக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments