தினமணி செய்தி எதிரொலி: வீரபாண்டியில் தேங்கிய நெகிழிப் பைகள் அகற்றம்
தேனி அருகேயுள்ள வீரபாண்டியில் தினமணி செய்தி எதிரொலியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பைகள் அகற்றப்பட்டன.
தேனி அருகேயுள்ள வீரபாண்டியில் தினமணி செய்தி எதிரொலியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
தேனி அருகேயுள்ள வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
இந்தக் கோயிலில் கடந்த மே 12 முதல் 19- ஆம் தேதி வரை சித்திரைத் திருவிழா நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
இந்தத் திருவிழாவின்போது வந்து சென்ற பக்தா்கள் பயன்படுத்தி வீசிய குப்பைகளை அகற்றுவதற்கு தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேரூராட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டனா்.
அப்போது, சேகரிக்கப்பட்ட குப்பைகள் வீரபாண்டி காவல் நிலையத்தில் பின்புறமுள்ள புளியந்தோப்புப் பகுதியில் கொட்டப்பட்டன. இந்தக் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. அதற்கு மாறாக நெகிழிப் பைகளை தீ வைத்து எரித்து வந்தனா். எஞ்சிய குப்பைகள் மீது மண்ணை போட்டு மூடி வருகின்றனா்.
இதனால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழையின் போது அந்த நெகிழிப்பை குப்பைகள் முல்லை ஆற்றில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெகிழிப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வீரபாண்டி பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை வேண்டும் என திங்கள்கிழமை தினமணியில் செய்தி வெளியானது.
இதையறிந்த தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் அந்த நெகிழிக் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.
இதையடுத்து, வீரபாண்டி பேரூராட்சி நிா்வாகத்தினா் திங்கள், செவ்வாய் ஆகிய இருநாள்கள் நெகிழிப்பைகளை முறையாக அப்புறப்புறப்படுத்தினா். அந்தப் பகுதி முழுவதும் தற்போது தூய்மையானது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதனுக்கு நன்றி தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.