ஆவுடையாபுரத்தில் சூறைக்காற்று 8 ஏக்கர் வெற்றிலை கொடிகள் நாசம்
விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 8 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை கொடிகள் கீழே சாய்ந்து விட்டன.
விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 8 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை கொடிகள் கீழே சாய்ந்து விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் அருகே ஆவுடையாபுரம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிகள் கீழே சாய்ந்து சேதமடைந்தது. வருவாய் கிடைக்கும் நேரத்தில் வெற்றிலை கொடிகள் கீழே சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அதேபோல், பலத்த காற்றின் போது 2 மின் கம்பங்கள் சாய்ந்ததால், ஒரு நாள் முழுவதும் இக்கிராமத்தில் மின் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் மின் வாரிய பணியாளர்கள் புதிய மின் கம்பங்கள் ஊன்றி மின் தடையை சரி செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சேகர் கூறியது: ஆவுடையாபுரத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மோட்டார் பாசனம் மூலம் வெற்றிலை விவசாயம் நடைபெற்ற வருகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ. 7.50 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில் பலன் தரக் கூடிய நிலையில் இருந்த வெற்றிலை கொடிகள் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக கீழே சாய்ந்து விட்டது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.