சிவகாசியில் கூடுதல் போக்குவரத்து போலீஸார் நியமிக்க கோரிக்கை
சிவகாசியில் கூடுதல் போக்குவரத்து போலீஸார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் கூடுதல் போக்குவரத்து போலீஸார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி நகரில், அம்பேத்கார்சிலை, பேருந்துநிலையம், நகராட்சி தினசரி காய்கறிச்சந்தை, சிவன்கோயில் உள்ளிட்ட 10 இடங்களில் போக்குவரத்து போலீஸார் நின்று போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும்.
தற்போது போக்குவரத்து போலீஸில் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 11 போலீஸார் மட்டுமே உள்ளனர்.
இதனால் போக்குவரத்தினை சீரமைப்பது என்பது போலீஸாருக்கு சவாலான விஷயமாக உள்ளது.
போக்குவரத்து போலீஸார் பள்ளி நேரங்களில் காலையில் சுமார் 8 மணி முதல் 9 மணி வரை பணியில் ஈடுபடுவார்கள். போக்குவரத்து போலீஸாரின் உணவு இடைவேளையின் போது, பொதுமக்கள் ஒரு வழிப்பாதையை கடைபிடிக்காமல் செல்வதாலும், பல இடங்களில் இருசக்கரவாகனம் முறையற்று நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே சிவகாசியில் போக்குவரத்து போலீஸாரை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.