சாத்தூர்-சிவகாசி சாலையை சீரமைக்கக் கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்-சிவகாசி சாலையைச் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்-சிவகாசி சாலையைச் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்-சிவகாசி செல்லும் சாலையில் ஏராளமான கிராமங்களும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இதனால் இச் சாலையில் தினமும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அதிகளவில் பட்டாசு ஆலைகளும் இப் பகுதியில் உள்ளன. ஆனால் இச் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
தற்போது இச் சாலை மிகவும் குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், இதில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் சின்னகாமன்பட்டி அருகே சாலையின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியதால் தற்போது சாலையே பெரிய பள்ளமாகி குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே இச் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.