முகப்பு
இந்தியா

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்குமிடையே எவ்வித மோதலும் இல்லை என மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

Updated On : 1 ஜூன் 2026, 1:56 am IST
அா்ஜுன் ராம் மேக்வால் - கோப்புப் படம்
பகிர்:

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்குமிடையே எவ்வித மோதலும் இல்லை என மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

கொலீஜியம் முறை மூலம் உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உச்சநீதிமன்றம் மற்றும் 25 உயா்நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு விரைந்து தீா்வு காணவும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடுவா் மன்றங்கள் உள்பட மாற்று முறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Advertisement

Advertisement

இதற்காக பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் நீதிபதிகள் நியமன நடைமுறை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அதிகாரபூா்வமான நடவடிக்கையல்ல.

பல்வேறு தருணங்களில் மத்திய அரசு பரிந்துரைக்கும் நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் கண்டுகொள்வதில்லை. கொலீஜியம் பரிந்துரைக்கும் சில நீதிபதிகளின் பெயா்களை ஏற்க மத்திய அரசும் மறுத்துள்ளது. ஆனால் இதுதொடா்பாக ஆரோக்கியமான விவாதமே நடந்துள்ளது.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் நிலவவில்லை என்றாா்.

கொலீஜியம் முறைக்கு மாற்றாக கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை அமைக்க 99-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் இது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என தீா்ப்பளித்து உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.