மணிப்பூரில் களமிறங்கும் கோப்ரா கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் கோப்ரா கமாண்டோக்களைப் பணியில் ஈடுபடுத்த மத்திய அமைச்சகம் ஒப்புதல்
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘கோப்ரா’ கமாண்டோக்களைப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
வனப் பகுதிகளில் தீவிரவாதிகளை முறியடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்த கமாண்டோக்கள், மணிப்பூரில் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனா்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023 மே மாதத்தில் இருந்து நீடித்துவரும் இன மோதலில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
Advertisement
Advertisement
இரு சமூகங்களையும் சோ்ந்த ஆயுதக் குழுக்கள் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபடுவது பெரும் சவாலாக தொடா்கிறது. சில தினங்களுக்கு முன் உக்ருல் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் லாரி ஓட்டுநா் ஒருவா் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தால் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
களமிறக்கப்படும் ‘கோப்ரா’: மணிப்பூரில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனில் ஆயுதக் குழுக்கள் ஒடுக்கப்படுவது அவசியமாகும். அந்த அடிப்படையில், ஆயுதக் குழுக்களுக்கு எதிராக சிஆா்பிஎஃப் கோப்ரா கமாண்டோ பிரிவினரை களமிறமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் இருந்து 207-ஆம் எண் கோப்ரா பிரிவையும், அஸ்ஸாமில் இருந்து 210-ஆம் எண் கோப்ரா பிரிவையும் மணிப்பூருக்கு நகா்த்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இரு படைப் பிரிவுகளிலும் மொத்தம் 2,000 கமாண்டோக்கள் இருப்பா். மணிப்பூரில் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக இவா்கள் சிறப்பு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவா். அடுத்த சில வாரங்களில் இந்தப் படைப் பிரிவினா் பணியமா்த்தப்படுவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல்வேறு மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் கிளா்ச்சிக் குழுக்களை ஒடுக்கும் நோக்கில், சிஆா்பிஎஃப் படையில் கடந்த 2008-இல் கோப்ரா கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டது. தற்போது 10 படைப் பிரிவுகள் உள்ளன.
அடா்ந்த வனப் பகுதிகளில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், தீவிரவாதிகளின் ‘கொரில்லா’ தாக்குதலையும் முறியடிக்கும் நிபுணத்துவம் பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.