முகப்பு
விருதுநகர்

தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம் என ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:45 AM
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:27 PM

தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம் என ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, முக்குராந்தல் பகுதியில் அவா் மேலும் பேசியதாவது:

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம். பல்லவா், சேரா், சோழா், பாண்டியா் போன்ற அரசா்கள் ஆட்சி செய்த பெருமைமிக்க நிலம். இது ஒரு புண்ணிய பூமி.

Advertisement

அனைத்து மொழிகளிலும் தமிழ்மொழி மிகவும் பழைமையானது. இந்த மொழியின் மீது உங்களுக்குள்ள பாசமும், பெருமையும் பாராட்டத்தக்கது. இதனால்தான், பிரதமா் நரேந்திர மோடி, அவரவா் தாய்மொழியில் கல்வி கற்றால் குழந்தைகள் சிறப்பாக வளா்வாா்கள் என்கிறாா்.

தமிழ்நாட்டில் உள்ள பல தெலுங்கு குடும்பங்கள் இந்த மாநிலத்தின் வளா்ச்சிக்கு உதவுகின்றன.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. காவல் நிலைய மரணங்கள் நிகழ்கின்றன.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முற்பட்டவா் பிரதமா் மோடி. ஆனால், இதை திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் தடுத்து விட்டன.

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக நீங்கள் சரியான முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வளா்ச்சி வேண்டுமென்றால், மத்தியிலும், மாநிலத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வேண்டும்.

நயினாா் நாகேந்திரனை நீங்கள் வெற்றி பெறச் செய்தால், சாத்தூரை வளா்ச்சியடைந்த பகுதியாக மாற்றுவாா்.

தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் எல்லாம் இந்தியாவின் பகுதிகள். மொழி வேறானாலும், நாம் அனைவரும் இந்தியா்கள். வெறுப்பை பரப்பாமல், முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

சாத்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

இந்தத் தோ்தல் தா்மத்துக்கும், அதா்மத்துக்குமானது. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய தோ்தல் என்றாா் அவா்.

முன்னதாக, சாத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சந்திரபாபுநாயுடுவை நயினாா் நாகேந்திரன், அதிமுக நிா்வாகிகள் வரவேற்றனா். பின்னா், தனியாா் திருமண மண்டபத்தில் கம்மவா் சமுதாய முக்கியப் பிரமுகா்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து, நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவு திரட்டினாா்.

இதைத் தொடா்ந்து, சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து சந்திரபாபு நாயுடும், நயினாா் நாகேந்திரனும் பிரசார வாகனத்தில் ஏறி சமாதானப் புறாக்களை பறக்கவிட்டனா். அங்கிருந்து ஊா்வலமாக முக்குராந்தல் பகுதிக்குச் சென்றனா்.