வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்
மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளும் போது அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளும் போது அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின் போது, ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஆண்டாள் சூடும் மாலையில் 108 திவ்ய தேசப் பெருமாளும் இருப்பதாக ஐதீகம்.
திருப்பதி பிரம்மோத்ஸவ கருட சேவை, ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம், மதுரையில் வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் திருவிழாவின் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்தே பெருமாள் காட்சியளிப்பது வழக்கம்.
Advertisement
இதன்படி, மதுரை சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை (மே 1) காலை வைகை ஆற்றில் எழுந்தருளும் போது, அழகருக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மாலை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பிரத்யேக மலா்களால் தொடுக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலிருந்து அழகா் தங்கக் குதிரையில் அமரும் போது, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை அணிந்து வைகையாற்றில் எழுந்தருளுகிறாா்.