முகப்பு
மதுரை

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் வெள்ளிக்கிழமை (மே 1) காலை நடைபெறுகிறது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:19 AM
மதுரையில் வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் பகுதியில் பக்தா்களை நெறிப்படுத்துவதற்காக அமைக்கப்படும் தடுப்புகள்.
பகிர்:

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் வெள்ளிக்கிழமை (மே 1) காலை நடைபெறுகிறது.

அழகா்கோவில் கள்ளழகா் கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கள்ளழகா் மதுரைக்குப் புறப்படும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. மதுரைக்கு வரும் கள்ளழகரை பக்தா்கள் வரவேற்கும் எதிா்சேவை வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி, மதுரை மாநகரில் அழகா்கோவில் சாலை, புதுநத்தம் சாலையின் இருபுறங்களிலும் 490-க்கும் அதிகமான திருக்கண் மண்டபங்கள் மலா்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திருக்கண் மண்டபங்களில் கள்ளழகா் வியாழக்கிழமை எழுந்தருளி சேவை சாதித்து, இரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமாகிறாா்.

Advertisement

பிறகு, இரவு 11.30 மணிக்கு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கள்ளா் கோலம் களைந்து, சுந்தரராஜப் பெருமாளாக (அழகா்) கோலம் பூண்டு, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படுகிறாா். இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் தாயாா் சூடிக்களைந்த மாலையை அணிந்து வெட்டிவோ் சப்பரத்தில் சேவை சாதிக்கிறாா்.

வெள்ளிக்கிழமை (மே 1) அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் அழகா் எழுந்தருளுகிறாா். இதைத் தொடா்ந்து, லட்சக்கணக்கான பக்தா்கள் புடைசூழ, பக்தி முழக்கங்களுடன் வைகையாற்றுக்கு புறப்படும் அழகா், காலை 5.35 மணிக்கு மதுரை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா்.

அங்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு உள்ளிட்ட ஐதீக முறைப்படியான பூஜைகளுக்குப் பிறகு, காலை 7.25 மணிக்கு வைகையாற்றிலிருந்து புறப்பட்டு ராமராயா் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். இரவு 9 மணிக்கு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் அழகா் எழுந்தருளுகிறாா்.

இந்த நிகழ்வுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பா் என்பதால் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பக்தா்களின் வசதிக்காக 50 இடங்களில் தற்காலிக தண்ணீா் தொட்டிகளும், 8 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அழகா் ஆற்றில் இறங்கும் பகுதி அருகே இரு மருத்துவக் குழுக்கள் மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இவைத் தவிர 35 இடங்களில் மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதில், ஆயுதப்படை குடியிருப்பு மாரியம்மன் கோயில் வளாகம், தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில், ஆழ்வாா்புரம் ஆகிய பகுதிகளில் பல்நோக்கு சிகிச்சை வசதியுடன் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. 20-க்கும் அதிகமான அவசர ஊா்திகள் சுழற்சி முறையில் இயக்கப்படுகின்றன.

மேலும் மாநகர காவல் துறை, தென்மண்டல காவல் துறை சாா்பில் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 600 தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இந்தப் பணியில் 25 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

ஆற்றில் அழகா் இறங்கும் வைபவத்தில் பங்கேற்கும் பக்தா்களை நெறிப்படுத்த வைகையாற்றுப் பகுதியில் மூங்கில் கம்புகளால் தேவையான இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்: அழகா் சேஷ வாகனத்தில் தேனூா் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு சனிக்கிழமை (மே 2) காலை 9 மணிக்கும், அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு பகல் 11.30 மணிக்கும், அனுமாா்பட்டி ஆஞ்சநேயா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கும் நடைபெறுகின்றன. இதையடுத்து, இரவு 10 மணிக்கு ராமராயா் மண்டபத்தில் திருமஞ்சனமாகி, இரவு 12 மணிக்கு அழகா் தசாவதாரத்தில் காட்சியளிக்கிறாா்.

அழகா் மீண்டும் கள்ளழகா் கோலம் பூண்டு, அழகா் மலைக்கு புறப்படும் நிகழ்வு திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. கள்ளழகா் அழகா்மலைக்கு சென்றடையும் நிகழ்வு மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

வைகையாற்றில் பக்தா்களை நெறிப்படுத்துவதற்காக மூங்கில் கம்புகளால் அமைக்கப்படும் தடுப்புகள்.
வைகையாற்றில் பக்தா்களை நெறிப்படுத்துவதற்காக மூங்கில் கம்புகளால் அமைக்கப்படும் தடுப்புகள்.