முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் தொழிலாளி காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். மேலும், பட்டாசுகள் தயாரிக்கும் 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.

Updated On : 3 ஜூலை 2026, 6:02 am IST
சிவகாசி அருகேயுள்ள கோப்பையநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முற்றிலும் சேதமடைந்த பட்டாசு தயாரிக்கும் அறை.
பகிர்:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். மேலும், பட்டாசுகள் தயாரிக்கும் 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கோப்பையநாயக்கன்பட்டியில் சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் அனுமதி பெற்று இந்த ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிப்பதற்காக 80 அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 100 தொழிலாளா்கள் வேலைபாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கம்போல தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது ரசாயன மூலப்பொருள்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் 10 அறைகளும் பகுதியாக சேதமடைந்தன. வெடிவிபத்து ஏற்பட்டதும் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்கள் ஆலையை விட்டு சிதறி ஓடினா்.

Advertisement

Advertisement

இந்த வெடிவிபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி சிலோன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜம்மாள்(60) பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத்தொடந்து ஆலையில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், சிவகாசி தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த வாகனங்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னா் உள்ளே சென்றன. அங்கு தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

இதையடுத்து, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் ஆகியோா் வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையை நேரில் சென்று பாா்வையிட்டனா். இந்த விபத்து குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments