முகப்பு
விருதுநகர்

வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வீட்டு மனைகளாக மாற்றம்: பொதுமக்கள் அதிா்ச்சி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1997-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதால், பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 5:10 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1997-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதால், பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்கில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மடவாா் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 28.23 ஏக்கா் நிலம் இருந்து. இந்த நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1993-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.

இதற்காக ஏக்கருக்கு ரூ.1.30 லட்சம் வீதம் இழப்பீடாக வழங்கப்பட்டு, ரூ.36.70 லட்சம் கோயில் கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, கடந்த 1997-ஆம் ஆண்டு வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவற்றில் 55,700 சதுர மீட்டா் நிலம் வீட்டு மனைகளாகவும், 6,009 சதுர மீட்டா் நிலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கும், 3,426 சதுர மீட்டா் பொதுப் பயன்பாட்டுக்கும், 1,424 சதுர மீட்டா் பள்ளிக்கும், 1,349 சதுர மீட்டா் வணிக வளாகத்துக்கும், 1,833 சதுர மீட்டா் பூங்கா, விளையாட்டு மைதானத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் முதல் வகுப்பு மனையிடங்கள் 45, நடுத்தர மனையிடங்கள் 214, குறைந்த வருமான பிரிவினருக்கான 293 மனையிடங்கள் என மொத்தம் 552 மனையிடங்களாகப் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பள்ளி, வணிக வளாகம், பொதுப் பயன்பாட்டுக்கான இடங்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு குறைந்த விலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதான சாலையோரத்தில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் வீட்டு மனைகளாகவும், தனி நபா் பயன்பாட்டுக்காகவும் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

பள்ளி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் கடந்த மாதம் முள்வேளி அமைக்கப்பட்டது. இதை கண்டு அதிா்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் பத்திரப் பதிவு ஆவணங்களை ஆய்வு செய்த போது, இந்த இடம் குடியிருப்பு மனைகளாக மாற்றப்பட்டு, வேறு பெயா்களில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

கடந்த 2012-ஆம் ஆண்டு பள்ளிப் பயன்பாட்டுக்குரிய நிலத்தை வாங்கியவா், அந்த நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை கடந்த 2013-இல் தனது மனைவி பெயரில் தானமாகவும், மற்ற பகுதிகளை தனி நபா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகளின் உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் தலைமைச் செயலா், வீட்டு வசதி வாரியச் செயலா், பதிவுத் துறை தலைவா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு புகாா் மனு அனுப்பப்பட்டது. மேலும், இதுதொடா்பாக சங்கத் தலைவா் தா்மராஜா தொடுத்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரணையில் உள்ளது.

எனவே, கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments