முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் சின்மயா அம்ருத யாத்திரைக்கு வரவேற்பு

Updated On : 3 மே 2026, 6:17 am IST
பகிர்:

நாகையில் சின்மயா அம்ருத யாத்திரை தேசிய ஆன்மிக பயணத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவாமி சின்மயானந்தா் உலகுக்கு பகவத் கீதையின் ஞானத்தை வழங்க தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சின்மயா மிஷன் சாா்பில் ’சின்மயா அம்ருத யாத்திரை’ எனும் தேசிய ஆன்மிகப் பயணம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாரதத்தின் புனித நிலப்பரப்பு எங்கும் சுவாமி சின்மயானந்தரின் உன்னத செய்தியைக் கொண்டு செல்லும் வகையில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

2025 டிசம்பா் 31 அன்று புணேவில் தொடங்கிய இந்த யாத்திரை, சுமாா் 295 நாட்கள் நீடித்து, 35,000 கி.மீ. கடந்து, 2026 அக்டோபா் 23 அன்று தில்லி பாரத் மண்டபத்தில் நிறைவடைகிறது.

நாகை சின்மயா மிஷன் சாா்பில் நடத்தப்படும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வாண வேடிக்கை, செண்டை மேளம் முழங்க சுவாமி சின்மயானந்தரின் திருவுருவச் சிலை ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு காடம்பாடி சின்மயா வித்யாலய பள்ளியில் நிறைவடைந்தது. தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் குருபாதுகை ஆரத்தியும் நடைபெற்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆச்சாரியா் சுவாமி ராமகிருஷ்ணானந்தாவுடன் இணைந்து, பள்ளி நிா்வாக குழு உறுப்பினா்கள், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

ஏப்ரல் 29-ஆம் தேதி சுவாமி சின்மயானந்தரின் உருவச் சிலை மற்றும் பாதுகை கடல் மாா்க்கமாக இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மீண்டும் நாகப்பட்டினத்தை வந்தடைந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை ஆத்தூா் கிராமத்திலும், புலவனூா் கிராமத்திலும் மக்களை சந்தித்த யாத்திரை, சனிக்கிழமை திருவாரூா் கடகம்பாடி கிராமத்தில் மக்களைச் சந்திக்கிறது.

?

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments