சம்பா பணி தீவிரம்: பாசிக் மூலம் தரமான உரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
காரைக்கால் பகுதியில் சம்பா பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், விவசாயத்துக்கு தேவையான உரம் தரமாக
காரைக்கால் பகுதியில் சம்பா பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், விவசாயத்துக்கு தேவையான உரம் தரமாக குறைந்த விலையில் பாசிக் நிறுவனம் மூலம் வழங்க அரசு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில், சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. ஜூலை 19-ஆம் தேதி திறந்து விடப்பட்ட மேட்டூர் அணை நீர் கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு முழுமையாக வந்துசேரவில்லை. தவிர, முக்கொம்பு அணை உடைப்பினால் முற்றிலும் தண்ணீர் வரத்து நின்றுபோனது. குறைந்தளவு வந்த தண்ணீர் மற்றும் ஆழ் குழாய் பாசன வசதி மூலம் விதைப்பு செய்து நாற்றுகளை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதற்கிடையில், தண்ணீர் வரத்து முழுமையாக இல்லாத நிலை ஏற்பட்டு விளைநிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நாற்றுகள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், அடுத்த சில நாள்களில் தண்ணீர் வரத்தொடங்கியதால் நாற்றுகள் காப்பாற்றப்பட்டன.
தொடக்க நிலையிலேயே பல்வேறு போராட்டங்களுக்கிடையில், நாற்றுகளை தயார் செய்த விவசாயிகளுக்கு, தற்போது காவிரி நீர்வரத்தும், பெய்து வரும் மழையினால் ஆறு மற்றும் வாய்க்கால்களில் வரும் தண்ணீரும் போதுமானதாக இருந்து வரும் நிலையில், திருநள்ளாறு, அம்பகரத்தூர், தென்னங்குடி, விழுதியூர், பேட்டை, பத்தக்குடி, திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவுப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பத்தக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மணிமாறன், முத்துக்குமார் ஆகியோர் கூறியது: இப்பகுதியில், சி.ஆர். 1009 எனும் ரகம் விதைத்து நடவுப் பணி நடைபெறுகிறது. தண்ணீர் வரத்தின் தாமதத்தால், செப்டம்பர் மாத இறுதியில் செய்ய வேண்டிய நடவுப் பணி தற்போது தாமதமாக நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன் நடவுப் பணியை முடிக்க திட்டமிட்டு விவசாயிகள் பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம். மழை தொடங்கிவிட்டால் தொழிலாளர்கள் பணிக்கு வருவதும் சிரமமாகிவிடும்.
விதைப்பு செய்தது முதல் புதுச்சேரி அரசின் வேளாண் துறை அதிகாரிகளின் ஆதரவு என்பது இல்லை. அரசின் பாசிக் நிறுவனம் தனியாரைவிட தரமான உரம் குறைந்த விலையில் வழங்க வேண்டும். ஆனால், பாசிக் நிறுவனம் செயல்படமால் இருப்பது வேதனை அளிக்கிறது. இதனால், வேறு வழியின்றி விவசாயிகள் அம்பகரத்தூர், சேத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் உர வியாபாரிகளிடம் உரம் வாங்கி வருகிறோம். நடவுப் பணி செய்தவுடன் உரமிடவேண்டும். எனவே, விவசாயிகளுக்கு தரமான உரம் பாசிக் நிறுவனம் மூலம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சில விவசாயிகள் கூறியது: வேளாண்துறை சார்பில் சம்பா பருவ காலத்தில் சம்பா பெருவிழா நடத்துவது முந்தைய கால வழக்கம். இதன்மூலம், விவசாயிகள் தங்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெறவும், குறைகள் கூறவும், வேளாண் துறையினர் உரிய ஆலோசனை வழங்கவும் வாய்ப்பு இருந்தது. இதனால், நல்ல பயனை அடையமுடிந்தது. இப்பெருவிழா பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.
தமிழகத்தில் மாவட்டந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் முறை காரைக்காலில் இல்லை. இருப்பினும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கையில் முதல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பல விவசாயிகள் பங்கேற்று பயன்பெறும் வகையில் விரிவான முறையில் மாதந்தோறும் நடத்த வேண்டும். இயற்கை விவசாயத்தில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும்
என்றனர்.