குறைதீர் கூட்டத்தில் அளித்த புகாரின்பேரில் படுதார்கொல்லை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளித்த புகாரின்பேரில் அரசுத்துறை
மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளித்த புகாரின்பேரில் அரசுத்துறை அதிகாரிகளுடன் படுதார்கொல்லை பகுதியில் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
காரைக்காலில் அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தோர், திருப்பட்டினம் கொம்யூன், படுதார்கொல்லை கிராமத்தில் வெட்டப்பட்டு முடங்கியுள்ள சிற்றேரியை முறையாக வெட்டி தண்ணீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலையூர் பகுதியிலிருந்து படுதார்கொல்லை சாலை வரை விளைநிலம் உள்ள நிலையில், அந்த பகுதி சாலையை புதுப்பித்துத் தர வேண்டும். சாலையோர மின் விளக்குகளை அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆட்சியரகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் படுதார்கொல்லை பகுதி மேம்பாடு குறித்து பலரும் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஏ. விக்ரந்த் ராஜா படுதார்கொல்லை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ. ராஜசேகரன், கூடுதல் வேளாண் இயக்குநர் க. மதியழகன், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா, நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் மற்றும் மின்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் ஆட்சியருடன் சென்றிருந்தனர்.
அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.எம். தமீம் உள்ளிட்ட விவசாயிகள் பலரும் ஆட்சியரைச் சந்தித்து ஏரியை வெட்டி, முறையாக கரையமைத்து தண்ணீர் சேகரிக்க வேண்டும். தோட்டப் பயிர் செய்யும் சாகுபடியாளர்களுக்கு தண்ணீர் தேவையை கருத்தில்கொண்டு, இதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சாலை சீரமைப்பு, மின்கம்பங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த பகுதியில் மேம்படுத்த வேண்டும்.
மேலையூர் பகுதியில் அறுவடை செய்த நெல்லை உலர்த்த சிமென்ட் தளம் அமைத்துத் தர வேண்டும். விளைநிலைங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் உள்ள வாய்க்கால்களை முறையாக தூர்வாரி, வாய்க்கால் மதகுகளை பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.
படுதார்கொல்லை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்ததோடு, கிராமத்தின் உள்புறத்தில் சாலைகளை மேம்படுத்தித் தரவும் வலியுறுத்தினர்.
பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சித் துறை உள்ளிட்டவற்றின் நிதியின் மூலம் சாலைகளை புதுப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மின்சாரப் பிரச்னையைத் தீர்க்க மின்துறையினர் உரிய ஆய்வுகள் நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை வெட்டும் திட்டத்தை நிறைவேற்ற பொதுப்பணித்துறை சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்
என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.