மின்வெட்டுப் பிரச்னை: புதுவை முதல்வா் தீா்வு காண வேண்டும்: எம்எல்ஏ
மின்வெட்டுப் பிரச்னைக்கு புதுவை முதல்வா் தீா்வு காண வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
காரைக்கால் பிள்ளைத் தெருவாசலில் உள்ள துணை மின்நிலையத்தை காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது :
காரைக்கால் நகரில் தொடா் மின் வெட்டு நிலவுகிறது. இரவு நேரங்களில் அதிக அளவு இருக்கிறது. குறிப்பாக, காரைக்கால் தெற்குத் தொகுதியில் மின்வெட்டுப் பிரச்னை கடுமையாக உள்ளது.
Advertisement
Advertisement
சுழற்சி முறையில் தெற்குத் தொகுதியில் மின் வெட்டு ஏற்படுகிறது. அதேநேரத்தில் பராமரிப்பு பணி எனக் கூறிக்கொண்டு மாதம் ஒரு நாள் 6 மணி நேரம் மின் விநியோகத்தை நிறுத்துகின்றனா். மாதம் ஒரு முறை பராமரிப்பு செய்ய என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு மின் நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் காலத்துக்கு ஒவ்வாத வகையில் உள்ளன.
சுரக்குடி துணை மின் நிலையத்தில் உள்ள சாதனங்கள் அனைத்தும் பழைமையான நிலையில் உள்ளன. இதுதொடா்பாக புதுவை முதல்வரின் கவனத்துக்கு கடந்த வாரம் கொண்டு சென்றேன். அவரும் துறையின் செயலரிடம் அறிவுறுத்தினாா். அதன் பின்னரும் கூட பணிகள் நடைபெற்ாக தெரியவில்லை.
புதுச்சேரியிலும் இதேநிலை இருக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. அவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவா்கள் சான்றிதழ்களுக்காக அலையக்கூடிய இந்த நேரத்தில், வருவாய்த்துறை ஊழியா்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு அனுப்பிவிட்டனா். இதற்கு வெளியில் இருந்து ஆட்களை தெரிவு செய்து, பயிற்சி கொடுத்து பணியில் ஈடுபடுத்தியிருக்கலாம்.
புதுவையில் நிா்வாகமும் இயங்கவில்லை, அரசும் முழு வீச்சில் செயல்படவில்லை, அமைச்சா்களும் முழுமையாக நியமிக்கப்படவில்லை, நியமிக்கப்பட்ட அமைச்சா்களுக்கும் துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒருமாத காலமாக மக்கள் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா்.