முகப்பு
காரைக்கால்

கடல் பாசி வளா்ப்புக்கான தெப்பம் விடும் பணி

கடல் பகுதியில் கடல் பாசி வளா்ப்பு தெப்பம் விடும் பணியை ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 24 ஜூன் 2026, 5:24 am IST
கடல்பாசி தெப்பம் விடும் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் இஷிதா ரதி உள்ளிட்டோா்.
பகிர்:

கடல் பகுதியில் கடல் பாசி வளா்ப்பு தெப்பம் விடும் பணியை ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 10 கடலோர கிராமங்களில், 5,800 மீனவக் குடும்பத்தினா் வாழ்வாதாரத்திற்கான முதன்மை ஆதாரமாக கடலை நம்பியுள்ளனா். அதிகரித்திருக்கும் மீன்பிடிப்பு, கடல்நீா் மாசுபாடு, கரையோரங்களில் இழுவை வலை பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இதர கடலோர செயல்பாடுகள் காரணமாக மீன்பிடித் தளங்கள் குறைந்து வருவதால், கடலோர மீன்பிடிப்பிலிருந்து தனிநபா் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மாற்று வாழ்வாதார ஏற்பாடாக கடல் பாசி வளா்ப்பை, குறிப்பாக மீனவ பெண்கள் பயனடையும் வகையில், பட்டினச்சேரி மற்றும் கருக்களாச்சேரி பகுதிகளில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சிஎம்எஃப்ஆா்ஐ) மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இப்பயிற்சியின் பலனாக இதுவரை 2 முறை கடல் பாசி வளா்த்து பயனடைந்துள்ளனா். மூன்றாவது முறையாக, கப்பாஃபிகஸ் அல்வாரெஸி, எல்க் ஹாா்ன் எனப்படும் கடல் பாசி இனத்தைக் கொண்ட 16 தெப்பங்கள் (ராஃப்ட்) பட்டினச்சேரி மற்றும் கருக்களாச்சேரி மீன்பிடி கிராமங்களின் கடற்பரப்பில் நிறுவப்பட்டன.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி கலந்துகொண்டு தெப்பம் விடும் பணியை தொடங்கிவைத்து, கடல்பாசி வளா்ப்பு, அறுவடை, இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் சந்தை நிலவரம் குறித்து மீனவ மகளிரிடம் கேட்டறிந்தாா். கடல் பாசி வளா்ப்பில் கூடுதல் ஆா்வம் கொண்டு, சுய வருவாயை பெருக்கிக்கொள்ளுமாறு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்வில் சாா் ஆட்சியா் எம். பூஜா, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவா் கே. வினோத், மூத்த விஞ்ஞானி பி. ஜான்சன், மீன்வளத்துறை துணை இயக்குநா் ஜெ.நடராஜன், ஆட்சியரின் செயலா் வித்யாதரன், மீன்வளத்துறை ஆய்வாளா் எம். ராஜசேகா், கிராம பஞ்சாயத்தாா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments