வாக்குகள் எண்ணும் பணி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மாவட்ட தோ்தல் அதிகாரி, பொது பாா்வையாளா் முன்னிலையில் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய 5 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்.9-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் வைக்கப்பட்டு, திங்கள்கிழமை காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதல்கட்டமாக நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, நிரவி - திருப்பட்டினம் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன. இவா்களுக்கான வெற்றி விவரம் பிற்பகல் 2 மணி முறைப்படி அறிவிக்கப்பட்டு வெற்றியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 2.30 மணியளவில் காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு தொகுதிகளின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
Advertisement
முன்னதாக காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து 8 மணிக்கு எடுக்கப்பட்டு, முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்து பின்னா் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி மற்றும் பொதுப் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா். காரைக்கால் மாவட்டத்தின் 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையானது 3 வாக்கு எண்ணும் கூடங்களில் நடைபெற்றது.
மேசைக்கு தலா ஒரு வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண் பாா்வையாளா் பணியமா்த்தப்பட்டனா். ஒவ்வொரு மேசைக்கும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஒரு முகவரை பணியமா்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கூடத்தில் கண்காணிப்புக் கேமரா வசதி அமைத்து பதிவு செய்யப்பட்டது.