மே 20 முதல் காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து: எதிா்பாா்ப்பில் மக்கள்
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் மே 20-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இப்பகுதி மக்கள் எதிா்பாா்ப்பில் காத்திருக்கின்றனா்.
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. பயணிகள் ரயில் இயக்க பல்வேறு தரப்பினா் போராட்டம் நடத்தியும், உயரதிகாரிகளை சந்தித்தும் வலியுறுத்தி வந்தனா். இதையொட்டி ஓரு சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
கடந்த மாா்ச் மாத முற்பகுதியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கமும் இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டாா்.
Advertisement
இந்நிலையில், மே 20- ஆம் தேதி முதல் இப்பாதையில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே நிா்வாகம் மாா்ச் மாதம் அறிவித்தது.
இயக்கப்படவுள்ள ரயில்கள் : திருவாரூா் வழியாக இயக்கப்பட்டு வரும் தாம்பரம் - காரைக்கால் விரைவு ரயில் மே 20-ஆம் தேதி முதல் பேரளம், திருநள்ளாறு வழியாக இயக்கப்பட்டு, வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுகிறது.
வேளாங்கண்ணியில் தினமும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம், மயிலாடுதுறை வழியாக அதிகாலை 4.35 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. தாம்பரத்தில் தினமும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு அதே மாா்க்கத்தில் காரைக்கால் வழியாக அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
மயிலாடுதுறை - வேளாங்கண்ணி இடையே பயணிகள் ரயில் தினமும் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் காலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்தூா், பேரளம் வழியாக 8.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது. மயிலாடுதுறையில் மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
பேரளம், திருநள்ளாறு வழியாக மயிலாடுதுறை -காரைக்கால் இடையே தினசரி இயக்கப்படவுள்ள பயணிகள் ரயில் காலை 9.35 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு முற்பகல் 11.05 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறது. மதியம் 12.45 மணிக்கு காரைக்காலில் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.
மேலும் காரைக்கால் - திருச்சி இடையே இயக்கப்படவுள்ள டெமு பயணிகள் ரயில் காரைக்காலில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூா் வழியாக காலை 11.20 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. மாலை 4.45 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு அதே வழியாக இரவு 9.20 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறது.
ஏறக்குறைய 40 - 45 ஆண்டுகளுக்குப் பின் காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. இது காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.