முகப்பு
காரைக்கால்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 21 மே 2026, 7:23 am IST
திருநள்ளாறு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை உற்சாகமாக வரவேற்ற மக்கள்.
பகிர்:

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து புதன்கிழமை தொடங்கியது.

புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் மற்றும் பேரளம் இடையே ரயில் போக்குவரத்து 1980-களின் மத்தியில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டது.

இதனால், காரைக்காலுக்கு ரயில் வசதியே இல்லாத நிலையில், நாகூரிலிருந்து காரைக்கால் வரை ரயில் பாதை புதிதாக அமைத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு காரைக்காலில் இருந்து பேரளம் வரை 23.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில் பாதை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ . 325 கோடியில் தொடங்கப்பட்டது. மின் மயமாக்கும் வசதியும் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இப்பாதையில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்து மட்டும் நடைபெற்று வந்தது. பல்வேறு தரப்பினா் தொடா்ந்து வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படாமல், அவ்வப்போது ஓரிரு சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், மே 20- ஆம் தேதி முதல் இப்பாதையில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த மாா்ச் மாதம் தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

அதன்படி, புதன்கிழமை இந்த பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற பயணிகள் ரயிலுக்கு மதியம் 1 மணியளவில் திருநள்ளாறு ரயில் நிலையத்தில் பல்வேறு தரப்பினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

திருநள்ளாறு ரயில் உபயோகிப்பாளா் பயணிகள் நலச்சங்க தலைவா் வி.மனோகரன் தலைமையில், நாகப்பட்டினம் மற்றும் நாகூா் ரயில் பயணிகள் நலச்சங்கங்கள், திருநள்ளாறு வா்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சங்கங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டு ரயில் ஓட்டுநரை கெளரவித்து, ரயில் பயணிகளுக்கு இனிப்பு, உணவுப் பொட்டலங்கள், குளிா்பானம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.