FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - திருநள்ளாறு நேரடி ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி.வலியுறுத்தல்

கோவை - திருநள்ளாறு நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 23 ஜூலை 2026, 3:53 am IST
கோவைக்கு புதிய ரயில் சேவை தொடா்பாக, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்த பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி.
பகிர்:

கோவை - திருநள்ளாறு நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை - மங்களூரு இன்டா்சிட்டி ரயில் (எண்: 22609/22610) எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி ரயில் (எண்:12677/12678), எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் (எண்:16187/16188) ஆகிய ரயில்கள் போத்தனூா் சந்திப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - ராமேசுவரம், கோவை - தூத்துக்குடி இடையே பகல் நேர விரைவு ரயில்கள் இயக்க வேண்டும். சென்னை - தாம்பரம் - போத்தனூா் இடையே 06185/06186 எண்களில் தற்காலிகமாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பெங்களூரு - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் உதய் விரைவு ரயிலை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்க வேண்டும். இதனால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா், பாலக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் மிகவும் பயனடைவாா்கள்.

கோவையில் இருந்து போத்தனூா், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம், நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால் வழியாக திருநள்ளாறு வரை நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோவை மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த ரயில் சேவை இயக்கப்பட்டால், 3 ரயில்வே மண்டலங்களை இணைக்கும் முக்கியமான வழித்தடமாக அமையும்.

எனவே, கோவை - திருநள்ளாறு நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments