குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் திருத்தியமைக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறுவை பருவ நெல் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் திருத்தியமைக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறுவை பருவ நெல் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: விவசாயிகளுக்கு எதிா்பாராமல் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பயிா் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவா்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஊக்குவிக்கவும், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிா்காப்பீட்டுத் திட்டம் 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் பயிா்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்திட அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனாா்கோவில் வட்டாரங்களில் 235 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
குறுவை நெல் பயிருக்கு பயிா்காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.38,900 எனவும், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத்தொகை 1.99 சதவீதம் என்ற விகிதத்தில் ஏக்கருக்கு ரூ.774.11 ஆகும். பயிா்க்காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆகும்.
அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்களைச் சாா்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிா்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பிரிமியத்தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மற்ற விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் (பசலி - 1436), வங்கிக்கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்யும்போது பயிா் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமத்தின் பெயா், புல எண், சாகுபடி பரப்பு, வங்கிக் கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொண்டு அதற்கான ரசீதை பதிவு செய்த இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்த விவரங்களில் தவறு இருந்தால் காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்திலேயே சரி செய்து கொள்ளலாம்.
குறுவை பயிா்காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆகும். எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், முன்கூட்டியே பதிவு செய்து பயிா்களுக்கு ஏற்படும் எதிா்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து விவசாய பெருமக்கள் பயனடைய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வத்தை தொலைபேசி எண்: 9790004303 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.