தரங்கம்பாடியில் சீகன்பால்குவின் 300-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
ஜெர்மன் நாட்டு கிறிஸ்தவ பாதிரியார் சீகன்பால்குவின் 300-ஆவது நினைவு தினம் நாகை மாவட்டம், தரங்கம்பாடியில்
ஜெர்மன் நாட்டு கிறிஸ்தவ பாதிரியார் சீகன்பால்குவின் 300-ஆவது நினைவு தினம் நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் டென்மார்க் நாட்டிலிருந்து சீகன்பால்கு சோபியா ஹெட்பிக் என்ற கப்பலில் 222 நாள்கள் பயணம் செய்து கி.பி 1706-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். தரங்கம்பாடிக்கு வந்த அவர் தமிழ்மொழி பற்றுதல் காரணமாக தமிழை நன்றாக கற்று எழுதவும் படிக்கவும் சரளமாக தமிழ் பேசவும் செய்தார். பின்னர் 1715-ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் ஒன்றை வர வழைத்து தரங்கம்பாடி அருகேயுள்ள கடுதாசி பட்டறையில் அச்சகம் உருவாக்கி காகித ஆலை மை தயாரிக்கும் தொழிற்சாலை பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்து தயாரிக்கும் கூடத்தை நிறுவினார். இதன்மூலம், சீகன்பால்கு இந்தியாவில் முதன் முதலாக தமிழ்மொழியில் பைபிளை காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார். இதையடுத்து, தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திசூடி போன்ற பல நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்.
தொடர்ந்து, இந்து சமய கடவுள்களின் வரலாறு, தமிழ் இலக்கணம், செந்தமிழ் அகராதி, கொடுந்தமிழ் போன்ற நூல்களை அவர் காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார். அடுத்து, உலகில் தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருப்பதற்கு சீகன்பால்குவே காரணமாவார். மேலும், தமிழர்களுக்கு கல்விக் கூடங்கள் அமைத்து பெண் அடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், விதவைகளை ஆசிரியைகளாக்கி பெண்கள் படிக்கும் பள்ளிகள் அமைத்து சமுதாய புரட்சிக்கும் வித்திட்டார். இந்தியாவிலேயே பெண்களுக்கென தனியாக பள்ளிக்கூடம் அமைத்தவராவார். தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து மக்களைப் போராட தூண்டியவரும் இவரே.
ஆசியாவிலேயே தரங்கம்பாடியில் 1718-ஆம் ஆண்டு புதிய எருசம் ஆலயத்தை நிறுவினார். பின்னர், அவர் உடல் நலக்குறைவால் 1719-ஆம் ஆண்டு காலமானார். இவரது உடல் ஆலயத்தின் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்து 300 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் சனிக்கிழமை தமிழ்சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் டேனியல் ஜெயராஜ் தலைமையில் தரங்கம்பாடி கடற்கரையில் நிறுவப்பட்ட சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் பிஷப் டேனியல் ஜெயராஜ் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் தியாகராஜன், பாஸ்டர். நவராஜ் அபிரகாம், டி.பி.எம்.எல் கல்லூரி பேராசிரியர் முருகுபாண்டியன், தூய ஜான் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை புஷ்பலதா மற்றும் காபிரியேல்ஜெயகரன், பட்டதாரி ஆசிரியர் எர்பஸ்ட் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் ஜான் சைமன் செய்திருந்தார்.