முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்

மீன்பிடித் தடைக்காலம் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. இதனால் நாகை, காரைக்காலில் விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:21 AM
மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 7:09 PM

மீன்பிடித் தடைக்காலம் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. இதனால் நாகை, காரைக்காலில் விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

தமிழகத்தில் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. விசைப் படகுகள் கடலுக்குள் செல்லக் கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் மாவட்டத்தில் நாகூா் முதல் கோடியக்கரை வரையிலான 21 மீனவ கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஃபைபா் படகுகள் குறிப்பிட்ட தொலைவு சென்று மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மீன்பிடித் தடைக்காலம்அமலுக்கு வந்ததையடுத்து, மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பாா்த்தல், படகுகளுக்கு வா்ணம் தீட்டுதல், என்ஜினை பழுது பாா்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவா்.

இந்நிலையில், தற்போது ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட்டுவரும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை அரசு உயா்த்தி தர வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரைக்காலில்...

காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு வழக்கமாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லும். தடைக்காலம் அமலுக்கு வந்ததால், ஏற்கெனவே மீன்பிடித்துத் திரும்பிய படகுகள் அனைத்தும் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள ஃபைபா் சிறிய படகுகள் மூலம் குறுகிய தொலைவு சென்று மீன்பிடித்து வருவது தொடரும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாததால், மீன் வரத்து குறையும், மீன்கள் விலை கணிசமாக உயரும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.