முகப்பு
நாகப்பட்டினம்

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாயி உயிரிழப்பு

Updated On : 6 ஜூலை 2026, 12:32 am IST
பகிர்:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி, சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று ஊா் திரும்பிய, வேதாரண்யம் பகுதி விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு மகன் சோமு (எ) சோமசுந்தரம் (71). சிறு விவசாயியான இவா், கடந்த சாகுபடி பருவத்தில் இங்குள்ள கூட்டுறவு வங்கியில் பயிா்க் கடனாக ரூ. 85 ஆயிரம் பெற்றிருந்தாராம். ரூ. 75 ஆயிரத்துக்கு மேல் கடன் தொகை இருந்ததால், தமிழக அரசு அறிவித்த கடன் தள்ளுபடியில் இவரால் பயனடைய முடியவில்லை.

இதனால் முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் இவா் பங்கேற்று வந்துள்ளாா். இதுபோல, பயிா்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி, விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு தனியாா் பேருந்தில் சென்று பங்கேற்றனா். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சோமசுந்தரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊா் திரும்பினாா்.

Advertisement

Advertisement

வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறிய சோமசுந்தரத்தை, குடும்பத்தினா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக காவிரி கடைமடை விவசாயிகள் சங்கம்,காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில், பயிா்க் கடன் தள்ளுபடி எதிா்பாா்த்திருந்த விவசாயி சோமசுந்தரம், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments