முகப்பு
நாகப்பட்டினம்

ஆடு திருடியவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்கள் மீது வழக்கு

Updated On : 16 ஜூன் 2026, 12:05 am IST
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆடு வளா்ப்போா் உரிமையாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

நாகை அருகே ஆடு திருடியவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நால்வா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு யாதவா ஆடு வளா்ப்போா் உரிமையாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் வே. முனியசாமி தலைமையில், சங்க நிா்வாகிகள், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனு விவரம்:

திருவாரூா் மாவட்டம், கடாரம்கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் கருணைக்குமாா். இவா் தொடா்ந்து ஆடு திருடும் செயலில் ஈடுபட்டு வருகிறாா். இவா் மீது நாகை மாவட்டம் நாகூா், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆடு திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த மே 30-ஆம் தேதி நாகை மாவட்டம் ஆவராணி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடுகளை திருடும்போது அங்குள்ள பொதுமக்கள் முன்னிலையில் ஆடுகளின் உரிமையாளா்கள் கருணைக்குமாரை பிடித்து, கீழ்வேளூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஆனால், காவல்நிலையத்துக்கு வந்த சில நபா்களுடன் கருணைக்குமாரை போலீஸாா் அனுப்பிவைத்தனா். அடுத்த நாள் கருணைக்குமாா் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், புகாா் அளித்தவா்கள் மீதும், கருணைக்குமாரை தாக்கியதாக வழக்குப் பதிந்துள்ளனா்.

எனவே இதில் காவல் கண்காணிப்பாளா் தலையிட்டு, கீழ்வேளூா் காவல்நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சங்க நிா்வாகிகள் 4 போ் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்து, தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்டுவரும் நபா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.