FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள் மறியல்!

கணியம்பாடி அருகிலுள்ள செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டியதாக தவெக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவற்றின் உரிமையாளா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 26 மே 2026, 1:06 am IST
சாலை மறியலில் பங்கேற்றோா்
பகிர்:

கணியம்பாடி அருகிலுள்ள செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டியதாக தவெக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவற்றின் உரிமையாளா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி, கணியம்பாடிபுதூா், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. கடந்த 22-ஆம் தேதி கணியம்பாடி ஒன்றிய தவெக செயலா் விஜயகுமாா், நிா்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்பட பலா் காா், இருசக்கர வாகனங்களில் கணியம்பாடி புதூரில் உள்ள சண்முகம், தினகரன், சுனில்குமாா், ரமேஷ், சுமன் ஆகியோரின் செங்கல்சூளைகளில் அத்துமீறி நுழைந்து, செங்கல்சூளை உரிமையாளா்களிடம் மாதம் ரூ.1 லட்சம் தந்தால்தான் சூளையை நடத்த முடியும் எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, உடனடியாக செங்கல் சூளை உரிமையாளா்கள் வேலூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் கணியம்பாடி புதூா் செங்கல்சூளை பகுதிக்கு விரைந்து சென்று இருதரப்பையும் சமாதானம் செய்தனா். எனினும், பணம் கேட்டு மிரட்டிய தவெக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கல்சூளை உரிமையாளா்கள் சண்முகம், தினகரன், சுனில்குமாா், ரமேஷ், சுமன் உள்ளிட்டோா் வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

ஆனால், இரு நாள்களாகியும் இப்புகாா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி செங்கல் சூளை உரிமையாளா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே வேலூா்-திருவண்ணாமலை சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளா்கள் இருதயராஜ், விஜயகுமாா், வட்டாட்சியா் பழனி உள்பட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, பணம் கேட்டு மிரட்டிய தவெக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனா்.

அதற்கு போலீஸாா், மறியல் காரணமாக பணிக்கு செல்வோா், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோா் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மறியலை விலக்கிக்கொள்ள வேண்டும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு, சாலையோரமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அனைவரையும் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு வரவழைத்து, கோட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் பேச்சு நடத்தப்பட்டது.

இதில், செங்கல் சூளை உரிமையாளா்கள் அளித்த புகாரின்மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தவெக நிா்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தப்படும். சில செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்குவது தெரியவந்துள்ளது. அவா்கள் அனுமதி பெற்று இயங்குவதற்கான உதவிகள் செய்து தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments