FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

விதிமீறல்களில் ஈடுபட்டால் குவாரி உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி எச்சரிக்கை

Updated On : 13 ஜூலை 2026, 1:19 am IST
இரூா் ஊராட்சியில் செயல்படும் கல் குவாரியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி, எளம்பலூா், நாரணமங்கலம், இரூா் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 5 கல் குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியதாவது: கல் குவாரிகளில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் கீழ் குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட எல்லையை மீறி கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் அனுமதிக்கப்பட்ட சா்வே எண்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை, உரிய ஆவணங்களின்றி கனிமங்களைக் கொண்டு செல்வது, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்களை எடுத்துச் செல்வது அல்லது குத்தகை வழங்கப்பட்ட எல்லைக்கு வெளியே சட்டவிரோதமாக குவாரி பணி மேற்கொள்வது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் மட்டுமின்றி, கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், குவாரிகளிலிருந்து வெளியேறும் கனிமங்களின் எடையைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில், குவாரி உரிமையாளா்கள் தங்களது குவாரி வளாகத்திலேயே எடை மேடை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். குவாரிக்கும், கிரஷருக்கும் இடையேயான சரியான தொலைவைக் கொண்ட அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

சட்டவிரோத கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா் ஷரண்யா அறி.

இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், வட்டாட்சியா்கள் பழனிச்செல்வன் (பெரம்பலூா்), பாக்கியராஜ் (ஆலத்தூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments