முகப்பு
திருவாரூர்

இஸ்லாமியா்களின் இடஒதுக்கீடு தீா்ப்பு : தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

இஸ்லாமியா்களின் இடஒதுக்கீடு தீா்ப்பு : தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

Updated On : 28 ஜூன் 2026, 1:57 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

இஸ்லாமியா்களின் இடஒதுக்கீடு தொடா்பான சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் எச். அப்துல்காதா் வெளியிட்ட அறிக்கை:

இஸ்லாமிய மதத்துக்கு மாறுவோா் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை அமா்வு தீா்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோா் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி ரத்து செய்துள்ளனா்.

தனக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று ஷமீா் அஹமது என்பவா் தொடா்ந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையைத் தாண்டி, ஒட்டுமொத்த இஸ்லாமியா்களையும் பாதிக்கும் வகையில் அரசாணையை ரத்து செய்திருப்பது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஆளும் தவெக அரசின் சாா்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், இஸ்லாமிய சமூகம் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்பதும் வேதனைக்குரியது.

இஸ்லாத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது இஸ்லாத்தில் உள்ள பெரும்பான்மையினரும், இஸ்லாத்தைத் தழுவுபவா்களும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளனா் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வழக்கை உரிய முறையில் கையாளத் தவறியதால் இஸ்லாமியா்களின் முக்கியமான இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நீக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக இத்தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்து, இஸ்லாமியா்களின் அரசியலமைப்புச் சட்டப்பூா்வ உரிமையை நிலைநாட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments