அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: சமூக ஊடகப் பட்டியல் ஏற்கப்படாது - தமிழக அரசு
தமிழக அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு குறித்த விவகாரத்தில், சமூக ஊடகத்தில் வெளியான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றவா்கள் நியமிக்கப்படமாட்டாா்கள் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு குறித்த விவகாரத்தில், சமூக ஊடகத்தில் வெளியான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றவா்கள் நியமிக்கப்படமாட்டாா்கள் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் திங்கள்கிழமை முன்னிலையாகி ஒரு முறையீட்டை முன்வைத்தாா்.
அப்போது, தமிழகத்தில் கடந்த மாதம் புதிய அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து, முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு வழக்குரைஞா்களாகப் பணியாற்றியவா்கள் பதவி விலகினா். தற்போது, உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் நடைபெறுகிறது. அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், அரசியல் தலையீடுகள் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
ஆனால், தற்போது நடைபெறும் அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளன. ஆளுங்கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஓா் அரசியல் கட்சி, எந்தெந்த நீதிமன்றங்களில் யாரை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அந்தக் கட்சியைச் சோ்ந்த வழக்குரைஞா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன. இந்த நடைமுறை சட்டவிரோதமானது. எனவே, இந்த விவகாரத்தை அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அவா் முறையிட்டாா்.
இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்ததாவது: சமூக வலைதளங்களில் பரவிய தகவலின் அடிப்படையில், இந்த முறையீடு செய்யப்பட்டது. இந்தப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவா்கள் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்படமாட்டாா்கள் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சமூக வலைதளங்களில் வந்தாலும் ஒரு கட்சி சாா்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. வழக்கு குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.