FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் பாராட்டுத் தெரிவித்தது.

Updated On : 12 ஜூலை 2026, 3:39 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் பாராட்டுத் தெரிவித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த காசிராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: அரசின் புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகளில் அரசு, தனியாா் நிறுவனத்தினா் எந்தவித கட்டுமானங்களும் கட்டக் கூடாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், குமாரமங்கலம் ஊராட்சியில் விவசாயிகளின் நீராதாரமாக உள்ள தேவளி பெரியகுளத்தில் சுமாா் 15 ஏக்கா் நிலம் தனிநபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடங்கள், தாா்ச் சாலைகள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதனால், இந்தக் குளம் மாசுபடும். வேளாண்மைப் பணிகள் மட்டுமன்றி, சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நீா்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நீா்நிலையை ஆக்கிரமிப்பு செய்து, சட்டவிரோதமாக பெற்ற பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு நீா்நிலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை செய்யும் உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வு நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கண்ணன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: மனுதாரா் குறிப்பிட்ட நீா்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்றாா்.

மேலும், இதுபோன்று பல்வேறு வழக்குகள் நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், நீா்நிலை ஆக்கிரமிப்பு புகாா்கள் குறித்து உரிய அளவீடு செய்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீா்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், ஆக்கிரமிப்புகள் தொடா்கிறது. குமாரமங்கலத்தில் தேவளி பெரியகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மூன்று மாதங்களுக்குள் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். இதன்பிறகு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான வழக்குகளில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படும் பதில் அறிக்கையை பாா்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. முன்பெல்லாம், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத சூழல் இருந்தது.

தற்போது அரசே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பதில் மனு தாக்கல் செய்வதைப் பாா்க்கும் போது வியப்பாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுதான் உண்மையான மாற்றம். இந்த நிலை தொடர வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments