மாநகராட்சி தாற்காலிக துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரமாக்க தில்லி அரசு உத்தரவு
மாநகராட்சிகளில் பணியாற்றும் தாற்காலிக துப்புரவுபி பணியாளர்களை நிரந்தரமாக்கும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மூன்று மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சிகளில் பணியாற்றும் தாற்காலிக துப்புரவுபி பணியாளர்களை நிரந்தரமாக்கும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மூன்று மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளில் பணியாற்றும் தாற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தில்லி அரசின் இந்த தீர்மானத்தை செயல்படுத்தும் வகையில், மூன்று மாநகராட்சிகளும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தில்லி நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலருக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், கிழக்கு, வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் பணியாற்றும் தாற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க மாநகராட்சி ஆணையர்கள் உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாஜக தலைமையிலான வடக்கு தில்லி மாநகராட்சியின் அவைத் தலைவர் ஜெயந்தர் தாபாஸ் கூறுகையில், "தாற்காலிக துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரமாக்க வடக்கு தில்லி மாநகராட்சி தயாராக உள்ளது. ஆனால் வடக்கு தில்லி மாநகராட்சியிடம் அதற்கு தேவையான நிதி இல்லை. தில்லி அரசு அதற்கு உரிய நிதியை வழங்கினால், அவர்களை நிரந்தரமாக்க தயாராக இருக்கிறோம்' என்றார்.
வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் தலா சுமார் 25,000 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். அதில், வடக்கு தில்லி மாநகராட்சியில் மட்டும் சுமார் 22,000 பேர் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். கிழக்கு தில்லி மாநகராட்சியில் மொத்தம் 15, 000 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். அதில் சுமார் 12,000 பேர் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.