கட்சி அலுவலகம் மீதான தாக்குதல்: காங்கிரஸுக்கு தக்க பதிலடி: ஆம் ஆத்மி எச்சரிக்கை
ஆம் ஆத்மி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆம் ஆத்மி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. அப்போது, சீக்கியர்கள் படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், "சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை நியாயப்படுத்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை இடம் பெற்றிருந்தது.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் - ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ராஜீவ் காந்தி தொடர்பாக ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆம் ஆத்மி மறுப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், தீன தயாள் உபாத்யாய் மார்கில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஆம் ஆத்மி அலுவலகம் மீது காங்கிரஸ்காரர்கள் கல் எறிந்ததாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஆம் ஆத்மி அலுவலகம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால், காங்கிரஸுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் தில்லி அமைப்பாளரும், தொழிலாளர் துறை அமைச்சருமான கோபால் ராய் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லி டிடியு மார்கில் அமைந்துள்ள ஆம் ஆத்மி அலுவலகம் மீது காங்கிரஸ் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபோன்ற தாக்குதல்களை ஆம் ஆத்மி இனியும் பொறுத்துக் கொள்ளாது. இதை அனுமதிக்கவும் முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவுள்ளோம். இதுபோன்ற சூழலில், காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும், பாஜகவை தனியொரு கட்சியாக ஆம் ஆத்மி எதிர்கொள்ளும். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் கட்சியினர் குற்றவாளிகள். ஆனால், ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திருப்ம்பப் பெற வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.